ஒவ்வொரு குழந்தையும் பிறந்த ஒரு வருடத்திற்குள் சரியான அளவு எடையை அடைய வேண்டும். குழந்தையின் எடையை அதிகரிக்க சத்தான உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதே சரியான தீர்வு. இயற்கையாக ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடையை அதிகரிக்க எந்த உணவுகளை அளிக்க வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.

1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

1தாய்ப்பால்

குழந்தைக்கு உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கின்றன. எனவே குழந்தை பிறந்து முதல் 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்குடீ பின்னர் தாய்ப்பால் உடன் திட உணவுகளை கொடுக்கலாம்.

தாய் ஒல்லியாக இருந்தால் தாய்ப்பால் சுரக்காது என்று இல்லை. தாய்ப்பால் அனைத்து தாய்மார்களுக்கும் சுரக்கும். தாய்ப்பால் சுரக்க உதவும் உணவுகளை சேர்ப்பதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

2வாழைப்பழம்

வாழைப்பழமானது இயற்கையாகவே குழந்தைகளுக்கு அதிகளவு ஆற்றல் தரும் பழம். ஒரு வாழைப்பழத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கலோரிகள் உள்ளன. மேலும் வைட்டமின் பி6 மற்றும் சி, நார்சத்து, மாவுச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. குழந்தை பிறந்து 6 மாதம் முடிந்தவுடன் வாழைப்பழம் கொடுக்க ஆரம்பிக்கலாம். பச்சை வாழைப்பழம் தவிர்த்து மற்ற அனைத்து வாழைப்பழங்களும் குழந்தைகளுக்கு ஏற்றது.

3கேழ்வரகு

கேழ்வரகு குழந்தைகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவு. குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்னர் கேழ்வரகு கொடுக்க ஆரம்பிக்கலாம். கேழ்வரகில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி1 மற்றும் பி2, புரதச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இது குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும். குழந்தைக்கு ராகி கூழ், ராகி கஞ்சி, ராகி இட்லி, ராகி தோசை, ராகி புட்டு போன்ற வழிகளில் கொடுக்கலாம்.

4பசு நெய்

பசு நெய்யில் அதிகளவு ஊட்டச்சத்துகள் உள்ளது. மேலும் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. குழந்தை பிறந்து 8 மாதத்துக்கு பின்னர் உணவில் பசு நெய் சேர்த்து கொடுக்கலாம். பருப்பு சாதம், பொங்கல், கிச்சடி, உப்புமா மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளில் பசு நெய் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

5உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகளவு உனது. மேலும் இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை நன்கு வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

6சர்க்கரைவள்ளி கிழங்கு

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரைவள்ளிகிழங்கை கொடுக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இது குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இது குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாகும்.

7பருப்புகள்

குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்னர் பருப்பை அவர்களின் உணவில் சேர்த்து கொடுக்கலாம். பாசிப்பருப்பு, துவரம்பருப்பு மற்றும் உளுந்தம்பருப்பு ஆகியவை குழந்தையின் உடல்நலத்திற்கு நல்லது. பருப்பை வேகவைத்து அந்த நீரையும் கொடுக்கலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்புசத்து மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் கொழுப்பு மிகவும் குறைவு. பருப்பு சாதம், பருப்பு சூப் மற்றும் பருப்பு பாயாசம் என குழந்தைக்கு அவர்கள் உண்ணும் உணவில் பருப்பு சேர்த்து கொடுக்கலாம்.

8யோகர்ட்

குழந்தை பிறந்த 8 மாதத்திற்கு பின்னர் அவர்களுக்கு யோகர்ட் கொடுக்கலாம். இதில் வைட்டமின்கள், கால்சியம், தாதுக்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ளது. இது குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும். மேலும் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

9முட்டை

முட்டையில் புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 12, தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை அதிகம் உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சி, நரம்பு மண்டலம் சீராக செயல்பட மற்றும் மூளைவளர்ச்சி சீராக இருக்க உதவுகிறது. ஒருசில குழந்தைகளுக்கு முட்டை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அலர்ஜி ஏற்படவில்லை என்றால் வாரம் 3 நாள் முட்டையை வேகவைத்து கொடுக்கலாம்.

10மீன்

மீனில் வைட்டமின் டி, வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை அதிகம் உள்ளது. மீன் குழந்தைகளின் மூளைவளர்ச்சி மற்றும் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு முதலில் குழம்பு மீன் மட்டும் கொடுக்க வேண்டும். பொரித்த மீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

11பால்

பசும்பால் கிடைத்தால் குழந்தைக்கு தினசரி ஒரு டம்ளர் பசும் பால் கொடுப்பது மிகவும் நல்லது. இதில் குழந்தைக்கு தேவையான கால்சியம் அதிகளவு உள்ளது. எருமைப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை பால் குடிக்க பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டும். கட்டாயப்படுத்தி கொடுக்க கூடாது.

12நட்ஸ்

உங்கள் குழந்தை நன்றாக மென்று சாப்பிட பழகி இருந்தால் மட்டும் அவர்களுக்கு நட்ஸ் கொடுக்கலாம். குழந்தையானது 3 வயதிற்கு மேற்பட்டு இருந்தால் அவர்களுக்கு தாராளமாக நட்ஸ் கொடுக்கலாம். உளர் திராட்சை, பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

13இறைச்சி

குழந்தையானது ஒரு வயதிற்கு மேற்பட்டு இருந்தால் அவர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் ஆகியவற்றை நன்றாக வேகவைத்து காரம் குறைவாக சேர்த்து உணவில் சேர்த்து குடுக்கலாம். இதில் குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. மேலும் சிக்கன் மற்றும் மட்டன் ஆகியவற்றை சூப் வைத்தும் கொடுக்கலாம். அல்லது சாதத்தில் சாதத்தில் சிக்கன் அல்லது மட்டன் கறியை நன்றாக பிசைந்து கொடுக்கலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…